சென்னை: கே.கே.நகர் - பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் வரிசையாக பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகின்றனர் . ஏற்கெனவே நான்கு பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடக்கிறது.
இந்நிலையில் கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பள்ளியின் நிர்வாகிகளை இன்று (ஜுன் 4) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சம்மன் அனுப்பியிருந்தது.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் பத்ம சேஷாத்ரி பள்ளியின் தாளாளர் ஷீலா ராஜேந்திரன், முதல்வர் கீதா ஆகியோர் நேரில் ஆஜராகியுள்ளனர். இவர்களிடம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, ராம்ராஜ், சரண்யா ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்துகின்றனர்.
இந்த விசாரணையின்போது கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளவில்லை என கேள்விகளைக் கேட்க உள்ளனர். மேலும் இவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பள்ளியின் மீதான குற்றச்சாட்டுகளை அரசிடம் சமர்ப்பிக்கவும் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.