கரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றன. இதன் காரணமாக உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகளை பல நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து மலேசியாவிற்குச் சென்ற 350க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஊரடங்கினால், நீண்ட நாள்களாக அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசாவில் சென்ற பலரின் விசா காலம் முடிவடைந்த நிலையில், ஊரடங்கினால் இந்தியா திரும்ப முடியாமல் மிகுந்த மன உலைச்சலில் இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் கால தாமதமின்றி இந்தியாவிற்கு திரும்ப அழைத்துவர உத்தரவிடக் கோரி மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கரோனா தொற்றின் தீவிரம் காரணமாக பல நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனுமதித்தால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு மிகப்பெரிய பாதிப்பாக அமைந்துவிடும். அதனால், தேசிய ஊரங்கு சமயத்தில் வெளிநாட்டில் தங்கி உள்ளவர்களை இந்தியா கொண்டு வருவது நடைமுறை சாத்தியமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில், சிறப்பு விமானங்கள் மூலமாக வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்களை சொந்த நாடு திரும்ப மலேசிய அரசு ஏற்பாடு செய்துள்ளது போல, இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.