சென்னை நகருக்கு வேலை தேடிவரும் அப்பாவி இளம்பெண்களிடம் சிலர், சினிமா, தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் நல்ல சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றுகிறனர்.
அவ்வாறு ஏமாறும் பெண்களை அடுக்குமாடிக் குடியிருப்புகள், பங்களா வீடுகள், தனியார் விடுதிகள், மசாஜ் சென்டர்களில் தங்கவைத்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பதாக காவல் துறையினருக்கு அவ்வப்போது கிடைக்கும் ரகசிய தகவலின்பேரில் குற்றவாளிகளைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவலர்களுக்கு குரோம்பேட்டை நியூகாலனி பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. இந்தத் தகவலையடுத்து அந்த சென்டரை கண்காணித்த காவல் துறையினர் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதிசெய்யப்பட்டது.
பின்னர் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திவந்த சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த கலைவாணன் (23) என்பவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களை மீட்ட காவல் துறையினர் அவர்களை மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்: டிக் டாக் பிரபலம் கைது!