கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜசிம்ம நாயுடு. இவர் மீது ஹைதராபாத்தைச் சேர்ந்த உமாராணி என்பவர் தன்னை ஆபாசமாக படம் பிடித்ததாகக் கூறி ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜசிம்ம நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் ஆய்வாளர் ஞான செல்வம் உமாராணியிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, தன் மீது பொய் வழக்கு போட்டதாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், தன்னுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்த விஷ்ணு பிரியா என்பவரும் உமாராணி, பெண் ஆய்வாளர் ஞான செல்வம் ஆகியோருடன் சேர்ந்து தனது பணத்தை அபகரிக்க முயற்சிப்பதாக ராஜசிம்ம நாயுடு குற்றஞ்சாட்டினார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த உமாராணி என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு மேட்ரிமோனியல் மூலமாக தனக்கு பழக்கமானதாகவும், திருமணமானதை மறைத்து தன்னோடு இணைந்து வாழ முயற்சித்ததாகவும் தெரிவித்தார். பெண் ஆய்வாளர் ஞான செல்வம் உடன் சேர்ந்து 2 பெண்கள் தன்னிடம் 28 லட்சம் ரூபாய் வசூல் செய்ததை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார்.
ஆய்வாளர் ஞான செல்வம், வழக்கறிஞர் ஒருவருடன் பேசிய ஆடியோவில் தனக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வழக்குப்பதிவு செய்ததாக ஒப்புக்கொண்டார். தற்போது எழும்பூர் நீதிமன்றம், தொழிலதிபர் ராஜசிம்ம நாயுடு தெரிவித்த குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதால், சம்பந்தப்பட்ட ஆய்வாளர் உள்பட மூன்று பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜசிம்மன் நாயுடு தெரிவித்ததாவது, "என் மீது கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என நிரூபிக்க ஒரு வாரம் கால அவகாசம் கேட்டுள்ளேன். அதற்குள் நான் நிரபராதி என்பதை சட்ட ரீதியாக நிரூபிப்பேன்" என்றார்.
இதையும் படிங்க: துணை தாசில்தார் வீட்டில் கொள்ளை - காவல் துறை வழக்குப்பதிவு