சென்னை - அயனாவரம் சிவலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் சிவா (44). இவர் சென்னை மாநகராட்சி மண்டலம் எட்டில் 97ஆவது வார்டில் தற்காலிக களப்பணியாளராக உள்ளார்.
இவர் அயனாவரம் முத்தம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள ஆதவன் சூப்பர் மார்க்கெட் சென்று அதன் உரிமையாளரும் காங்கிரஸ் பிரமுகருமான சரவணன் என்பவரிடம் கரோனா பரிசோதனை எடுக்க கூறியுள்ளார். கடை ஊழியர்களிடமும் கரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், சரவணன் பரிசோதனை எடுக்க மறுத்ததுடன் சிவாவிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். பின்னர், வாக்குவாதம் வலுத்து சரவணன் கடையில் பணியாற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து சிவாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
உடனே அருகில் இருந்தவர்கள் சிவாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிகிச்சை பெற்று திரும்பிய சிவா இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் அயனாவரம் காவல் துறையினர் கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் சரவணன் மற்றும் ஊழியர்கள் என எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பல மணி நேர கரோனா வார்டு பணி - இரண்டாவது முறையாக கரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவப் பணியாளர்கள்!