சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சியில் 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை ரூ.811 கோடி டெண்டரில் முறைகேடு செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட 55 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
மூன்று படிநிலைகள்
அதில் 20 பக்கத்தில் முதல் தகவல் அறிக்கையை தயார் செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெண்டர் விவகாரத்தில் முறைகேடு செய்து ஊழல் புரிந்தது குறித்து முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக டெண்டர் விடுவதற்கான மூன்று படிநிலைகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றிலும் முறைகேட்டில் ஈடுபட்டு தனக்கு சாதகமான நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கி உள்ளதை லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் டெண்டர்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்பான நிறுவனங்கள் ஒரே நேரத்தில், ஒரே கணினியில் ஐபி முகவரியை பயன்படுத்தி, ஒரே செல்போன் எண்களையும் பயன்படுத்தி டெண்டர் விண்ணப்பித்து இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 47 டெண்டர்கள் இதுபோன்று செய்யப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
விதிமுறைகள் மாற்றி அமைப்பு
கமிஷன் கொடுத்த நிறுவனங்களுக்கோ அல்லது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான நிறுவனங்களுக்கோ டெண்டரை ஒதுக்கீடு செய்வதற்கு, அந்த நிறுவனத்திற்கு ஏற்றார்போல் டெண்டர் விதிமுறைகளை மாற்றி அமைத்து, டெண்டரில் யாரும் பங்கு பெற முடியாதபடி முறைகேட்டில் ஈடுபட்டதையும் கண்டுபிடித்துள்ளனர்.
சாதகமாக டெண்டர் ஒதுக்கீடு
தகுதியில்லாத நிறுவனங்களைக் கூட கமிஷன் பெற்றுக்கொண்டு சாதகமாக டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என விசாரணையில் உறுதியாகியுள்ளது.
பங்கெடுக்க முடியாத படி முறைகேடு
எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான அல்லது ஆதரவான நிறுவனங்கள் டெண்டர் ஏலத்தில் விண்ணப்பிக்கும் போது, விதிமுறைகளை மீறி, பலமுறை டெண்டர் விண்ணப்பித்து, மற்றவர்கள் பங்கெடுக்க முடியாத படி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்
இவ்வாறாக டெண்டர் விதிகளை வளைத்து, சாதகமான நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்து கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
8 விழுக்காடு கமிஷன்
அரசு ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றால் டெண்டர் மதிப்பீட்டில் 8 விழுக்காடு கமிஷனாக வழங்க வேண்டும் என அரசு ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எழுதப்படாத விதி
கமிஷனின் முதல் 50 விழுக்காடு பணத்தை டெண்டர் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக கொடுக்க வேண்டும். அதன்பின் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்ட உடன் மீதமுள்ள 50 விழுக்காடு பணத்தை கொடுக்க வேண்டும் என்பதே அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொல்லப்பட்ட எழுதப்படாத விதி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவசரமாக பழைய டெண்டர்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு அவசர அவசரமாக பழைய டெண்டர்களை கமிஷன் பெற்றுக்கொண்டு சாதகமான நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: எஸ்பி வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு - லாக்கர் சாவியை எடுத்துச்சென்ற போலீசார்