சென்னை: கல்லூரி பருவத் தேர்வுகளை ஆன்லைனில் எழுத அனுமதிக்க வேண்டும் எனக்கோரி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வள்ளுவர் கோட்டத்தில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக இன்று (நவம்பர் 22) மெரினா கடற்கரையில் மாணவர்கள் பெருமளவில் கூடி போராட்டம் நடத்தவுள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்குள் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடற்கரைக்குச் செல்லும் அனைத்து வழித்தடங்களும் பேரிகார்டுகளால் மூடப்பட்டு ஒவ்வொரு வாயிற்பகுதியிலும் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்ட சென்னை பகுதியிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக மாணவர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை சார்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.