சென்னை : ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர் சச்சின் ஜெயின் தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் ஆஷிஷ் குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி மெக்கானிக்கல் பிரிவில் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு வந்த சச்சின் ஜெயின் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவரின் தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் ஐஐடி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவரின் தற்கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மின்னஞ்சல் வாயிலாகவும், நேரடியாகவும் கருத்துக்களை கேட்டறிந்து 300 பக்க அறிக்கையை ஐஐடி நிர்வாகத்திடம் வழங்கியது. அதில் மாணவர்களின் அழுத்தத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இடையே இணக்கமான சூழலை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல பரிந்துரைகளை வழங்கப்பட்டன.
மேலும், மாணவர்கள் தற்கொலை விவகாரம் தொடர்பாக ஐஐடி நிர்வாகத்திடம், திலகவதி குழு சமர்ப்பித்த அறிக்கையில் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரையை அடுத்து தற்போது பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : "அரசியல் போராட்டம் நடத்தி தமிழீழ உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்" - பிரபாகரன் மகள் துவாரகா என பெண் வீடியோ வெளியீடு!