தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான தடுப்பூசி மருந்து சென்னை கிண்டியிலும், நீலகிரி குன்னூரிலும் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த இரு ஆய்வகங்களிலும் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை என மத்திய அரசு 2008ஆம் ஆண்டு உரிமங்களை ரத்து செய்தது.
அதனால் சென்னை கிண்டி பிசிஜி தடுப்பு மருந்து ஆய்வகத்தில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் தடுப்பூசி மருந்து தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து கிண்டி தடுப்பூசி ஆய்வகத்தில் குழந்தைகளுக்கான காசநோய் தடுப்பு ஊசி தயார் செய்ய உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் நான்கு லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதுகுறித்து பிசிஜி தடுப்பு மருந்து ஆய்வக ஆலோசகர் சேகர் ஈடிவி பாரத் தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி அளித்தார்.
அதில் அவர், "1948ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி கிண்டியில் நிறுவப்பட்ட பிசிஜி தடுப்பு மருந்து ஆய்வகம் மத்திய அரசின் பொது சுகாதார சேவை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. முதலில் இங்கு குழந்தைகளுக்கான காசநோய் தடுப்பு மருந்து பிசிஜி தயாரிக்கப்பட்டது.
2008ஆம் ஆண்டில் தரமான உட்கட்டமைப்பு இல்லை ஆய்வக உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2010ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நவீன உட்கட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டு உரிமம் பெற்றது. அதன்படி 2016ஆம் ஆண்டு 600 லட்சம் குழந்தைகளுக்கான காசநோய் தடுப்பு ஊசி மருந்துகள் உற்பத்தி செய்யும் திறனுடன் மீண்டும் பரிசோதனை தொடங்கியது.
இங்கு தாயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மத்திய அரசின் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு தரமான தடுப்பூசிகள் என சான்று பெற்றன. அதையடுத்து வியாபார நோக்கில் தயாரிக்கும் உரிமம் வழங்கப்பட்டது. அவ்வாறு 2020ஆம் ஆண்டு ஜூலை முதல் 2021 மார்ச் வரை 170 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்முறையாக நான்கு லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் ஆண்டிற்கு 400 முதல் 500 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்க முடியும். இந்தத் தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு காசநோய் வராமலிருப்பதற்காக பிரத்தியோகமாக தயாரிக்கப் படுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி : மருத்துவ நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - மத்திய அரசு விளக்கம்