சென்னை: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் மற்ற மாநிலங்களை விட ஏராளமான படங்களைத் தயாரித்து வருகிறது. இங்கு முன்னணி நடிகர்கள் என்று 15 பேர் வரை உள்ளனர். அவர்களது படங்களுக்கு மட்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சமீப காலமாகவே தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்புத் தராத நடிகர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் பலமுறை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், நடிகர் சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, அதர்வா உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 01) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் சங்கத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. நடிகர்கள் பலரும் குறிப்பிட்ட தேதிக்கு படப்பிடிப்புக்கு வருவதில்லை. படத்தில் நடிப்பதாக முன்பணம் வாங்கி விட்டு, அதன்பிறகு அப்படத்திற்கு முறையான கால்ஷீட் தருவதில்லை எனப் பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டன. மேலும், ஏற்கனவே கூறிய நடிகர்கள் மட்டுமல்லாமல் நடிகர் தனுஷ் உள்பட 14 நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடிகர் தனுஷ், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கி நடிப்பதாக ஒப்புக்கொண்டார். ஆனால், அந்தப் படம் சில பல தயாரிப்பு பிரச்னைகளால் நின்றுபோனது. தற்போது தனுஷ் அந்தப் படத்தை உடனடியாக முடித்துத் தர வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடிகர்கள் எஸ்ஜே சூர்யா, சிம்பு, யோகிபாபு, அதர்வா, விஷால் என ஏற்கனவே 5 நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தனுஷ், அமலாபால், ராய் லட்சுமி உள்ளிட்ட மொத்தம் 14 நடிகர்களின் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுக்க முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளிடம் இதுகுறித்து உரிய விளக்கம் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திடம் தெரிவிப்பதாக நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நடிகர், நடிகைகளின் பாதுகாப்புக்கு வரும் பவுன்சர்களுக்கு இனிமேல் தயாரிப்பாளர்கள் சம்பளம் தரமாட்டார்கள் என்றும்; இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர், நடிகையரின் உதவியாளர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களே இனி ஊதியம் தர வேண்டும் என்றும்; நடிகர்களின் சம்பளம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து சொன்ன நடிகர் ஆனந்த் ராஜ்!