கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வயது முதிர்ந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பணி ஓய்வு பெற்ற முதியோர்களை வீட்டில் உள்ள மற்றவர்கள் யாரும் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள். சுற்றியுள்ள நண்பர்கள், வீட்டின் அருகாமையில் உள்ள பூங்காக்கள், மர நிழல்கள்தான் புறக்கணிக்கப்படும் இவர்களுக்கான ஆறுதல். இவை தவிர கடைகளுக்குச் செல்வது இவர்களுக்கு பொழுதுபோக்காக இருந்த நிலையில், ஊரடங்கு அதற்கு வாய்ப்பில்லாமல் ஆக்கிவிட்டது.
இந்த கடுமையான சூழலை எப்படி எதிர் கொண்டார்கள் என சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பச்சையப்பனிடம் கேட்ட போது, "உண்மைதான், எப்போதும் காலையில் காலார நடை பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து வந்தோம். இதனால் வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடிந்தது. தற்போது அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் வீட்டின் உள் பகுதி, மாடி மற்றும் வராண்டா உள்ளிட்ட பகுதிகளில் நடை பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்கிறோம். இதனால் மன உளைச்சல் இருந்தாலும், வீட்டில் குழந்தைகளுடன் விளையாடி அதனை குறைக்கிறோம்" என்றார்.
அன்றாட பணிகள் முடங்கியுள்ளதால், ஓய்வூதிய பணத்தையும் குடும்பச் செலவிற்கு பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறதா என அவரிடம் கேட்டதற்கு, "உண்மையில் ஏராளமான செலவுகள் மிச்சமாகியுள்ளது என்பதே உண்மை. வெளியில் விசேஷங்கள், விழாக்களுக்கு செல்வதில்லை. தேவையற்ற உணவுகளுக்கு செலவு செய்யவில்லை. சினிமா, கடற்கரை என எங்கும் செல்ல முடியாததால் செலவு குறைந்துள்ளது. ஆனால் இதெல்லாம் சொந்த வீடுகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே என்பதால், வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு நிச்சயமாக பொருளாதார பாதிப்புகள் இருக்கலாம்" என்கிறார்.
இருப்பினும், இது அனைத்து தரப்பு ஓய்வு பெற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு பொருந்தாமல் போய்விடுவதுதான் வேதனையான விஷயமாக இருக்கிறது. பெரும்பாலான குடும்பங்களில் ஓய்வு பெற்றவர்கள் தங்களின் ஓய்வூதியத்தை குடும்பத்திற்கு கொடுப்பதுடன், வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் நிலையும் உள்ளது. இவர்களைப் போன்றவர்களுக்கு இந்த ஊரடங்கு மிகப்பெரிய பாதிப்பாகவே உள்ளது. விரைவில் ஊரடங்கு முடிவுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வயது முதிர்ந்தவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: தையல் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்த முகக்கவசங்கள்!