தமிழ்நாட்டில் தனியார் நர்சரி, மெட்ரிகுலேஷன், மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் என 10 ஆயிரத்து 558 தனியார் பள்ளிகள் உள்ளன.
இவற்றுக்கான கட்டணம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சுயநிதி கல்வி கட்டண நிர்ணய குழுவால் மாற்றி அமைக்கப்படுகிறது.
ஏற்கனவே சுயநிதி கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயம் செய்த கட்டணம் 2019-20ஆம் கல்வி ஆண்டுடன் ஐந்து ஆயிரத்து 400 பள்ளிகளுக்கு முடிவடைந்திருக்கிறது.
மேலும் கட்டணம் நிர்ணயம் செய்யாத பள்ளிகள், முழுமையாக அங்கீகாரம் பெறாத பள்ளிகள் என எட்டு ஆயிரத்து 200 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டி இருக்கிறது.
அந்த வகையில் 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு புதிய கட்டணங்களை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் கட்டணங்களை நிர்ணயிக்க தனியார் பள்ளிகள் தங்களுடைய வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டணம் நிர்ணயம் செய்யும்போது அரசால் பின்பற்றப்படும் ஆசிரியர் மாணவர் வீதத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் கணக்கில் கொள்ளப்படுவார்கள் எனவும், பெற்றோர், பள்ளி நிர்வாகம் பாதிக்காத வகையில் கட்டணம் நிர்ணயம் செய்து அளிக்கப்படும்.
ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக கட்டணம் நிர்ணயித்து வழங்கப்படும். தற்போது வரை 600க்கும் மேற்பட்ட பள்ளிகள் இதற்காக விண்ணப்பம் செய்துள்ளன. அவற்றில் 300 பள்ளிகள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன.
செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்காத பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முதல்முறையாக கட்டணம் நிர்ணயம் செய்ய விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தையும் குழு அறிவித்துள்ளது.
புதிய கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு முன்னர் பழைய கட்டணத்தையே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்றும், புதிய கட்டணம் நிர்ணயித்த பின்னர் அதன் அடிப்படையில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வசூலித்துக்கொள்ளலாம் எனவும் குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் பள்ளிகள் குறித்து பெற்றோர்கள் நேரடியாக குழுவிடம் புகார் அளிக்கலாம். அந்தப் புகார் மீது விசாரணை செய்யப்பட்டு பள்ளியில் தவறு செய்திருந்தால் கட்டணம் திருப்பி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை எத்தனை தவணைகளில் வசூல் செய்வது என்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். தற்போது கட்டணத்தை விரைந்து நிர்ணயிப்பதற்கான பணிகளில் குழு வேகமாக செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க... முழுக் கட்டணம் செலுத்த சொல்லும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை...!