கரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளிகளைத் திறப்பது குறித்தும், மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்துவதற்கான ஆலோசனைகளையும் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு ஆராய்ந்து வருகிறது.
இந்நிலையில் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆறுமுகம், பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள பரிந்துரைக் கடிதத்தில், ”எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களான ஆறாயிரம் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் தமிழ்நாடு முழுவதும் இயங்கிவருகின்றன. கரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து சில ஆலோசனைகளை வழங்குகிறோம்.
நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளின் அலுவலகங்களை ஜூலை ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தி, மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கலாம். அவர்களுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தொடங்கலாம்.
கடந்த ஆண்டு மாணவர்கள் படித்த பாடத்தினை, அவர்களுக்கு நினைவுபடுத்த, முதல் ஒரு வாரத்தில் பிரத்யேக வகுப்புகள் நடத்தலாம். இந்தக் கல்வியாண்டு முழுவதும் வாரம் ஒரு முறை சுகாதாரத் துறையிலிருந்து மருத்துவர்கள் வருகை புரிந்து, மாணவர்களின் உடல்நிலையைப் பரிசோதனை செய்யலாம்.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான முகக்கவசங்கள், சானிடைசர்கள், கபசுரக் குடிநீர் ஆகியவற்றையும், மாணவர்களின் உடல்நிலையைப் பரிசோதனை செய்வதற்கான பரிசோதனை உபகரணங்களையும் சுகாதாரத் துறை இலவசமாக வழங்க வேண்டும். கடந்த ஆண்டுக்கான கட்டணத்தைக் கட்டாமல் நிலுவையில் வைத்துள்ள மாணவர்களையும் படிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கான காலை வழிபாடு, உடல்கல்வி வகுப்புகள் உள்ளிட்ட மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகளை ஓராண்டிற்குத் தவிர்க்கலாம். பள்ளிகள் திறப்பதற்கு ஏற்படும் கால தாமதத்திற்கேற்ப பாடத் திட்டத்தினைக் குறைக்கலாம். பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என இரு தரப்பினருக்கும் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரம்பு மீறல் - பாஜக பிரமுகர் மீது காவல் துறையில் புகார்