சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து இந்திய மருத்துவ சங்கம், தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ராஜா கூறும்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அலுவலர்களுடன் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தினோம். அப்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் திறந்துவைத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
மருத்துவமனையை மீண்டும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்துவிட்டு விதிமுறைகளின்படி இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளனர். அதேபோல் காப்பீட்டு அட்டை வைத்து உள்ளவர்களுக்கு கரோனா வைரஸ் சிகிச்சை வழங்குவதற்கும் அனுமதி அளித்துள்ளனர்.
இருதய நோய், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை நோய் போன்ற தொடர் சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் பெற்று வரும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவர்களுடன் இணைந்து தொடர் சிகிச்சை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகளுக்கு கட்டணத்தை உயர்த்துவது குறித்தும் ஆலோசனை செய்து அனுமதி வழங்கப்படும் என உத்தரவாதம் தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'தேவையின்றிப் பயணித்த பயணிகளிடம் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேல் அபராதம்'