சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நிலத்தை பிளாட் போட்டு விற்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராகப்பணியாற்றி வருபவர், சுபாஷ் (38). இவரது அலுவலக விளம்பரப்பலகையைப்பார்த்து சுபாஷை அணுகிய, கொளத்தூர் பகுதியைச்சேர்ந்த சுந்தரேசன் என்பவர், நிலம் வாங்க 15 லட்சம் ரூபாயை தனியார் நிறுவனத்திற்குச்செலுத்தியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து சிறிது நாட்களில் தனக்கு நிலம் தேவைப்படவில்லை எனக்கூறி, மீண்டும் தான் வழங்கிய பணத்தை திருப்பித்தருமாறு மேலாளரான சுபாஷிடம் கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து நிறுவனத்தின் தரப்பில் இருந்து மேலாளர் சுபாஷ் மூலம் சுந்தரேசனுக்கு 3.5 லட்சம் ரூபாய் திருப்பி வழங்கப்பட்டு, மீதமுள்ள பணத்தை கொடுக்க கால அவகாசம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சுந்தரேசன் தரப்பில் இது தொடர்பாக வளசரவாக்கம் உதவி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சுந்தரேசன் புகாரால் பிரச்னை ஏற்பட்டதை, சுபாஷ் தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரான கீர்த்தனா என்பவரிடம் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து பிரச்னையை சுமூகமாக முடித்து விடலாம் எனக்கூறிய கீர்த்தனா, தனக்கு தெரிந்த வீரா என்பவரை சுபாஷிடம் வழக்கறிஞர் என அறிமுகப்படுத்திய நிலையில், வீரா மற்றும் கீர்த்தனா ஆகியோர் சுபாஷிடம் வளசரவாக்கம் உதவி ஆணையருக்கு 1 லட்சம் ரூபாயும், விருகம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாயும் கொடுத்தால் இந்தப்பிரச்சனையை முடித்து விடலாம் எனக்கூறி சுபாஷிடம் இருந்து 1.5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுச்சென்றுள்ளனர்.
பின்னர் இரண்டு நாள் கழித்து மீண்டும் சுபாஷின் அலுவலகத்திற்கு வந்த பெண் ஊழியரான கீர்த்தனா என்பவருடன், வந்த வீரா காவல்துறையினருக்கு மேலும் பணம் தேவைப்படுவதாகக்கூறி பணம் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சுபாஷ் தனக்கு தெரிந்த தொடர்புகள் மூலம் விசாரித்தபோது வீரா என்பவர் போலி வழக்கறிஞர் என்பதும், தான் ஏமாற்றப்பட்டதும் சுபாஷுக்கு தெரியவந்தது. இதனால் சுதாகரித்துக் கொண்ட சுபாஷ் தன்னிடம் பணம் இல்லை எனவும், இந்த பிரச்னையை தாங்கள் பேசி சுமூகமாக முடித்துக்கொள்வதாகவும் வீரா என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் கொடுத்த 1.5 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பித் தருமாறும் இருவரிடமும் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கீர்த்தனா மற்றும் வீரா ஆகிய இருவரும் பணத்தை திருப்பித் தர முடியாது எனவும், தங்களால் எதுவும் செய்ய முடியாது எனவும் கூறி தொழில் செய்ய விடமாட்டோம் என மிரட்டிச்சென்றுள்ளனர்.
இதனால் அதிச்சியடைந்த சுபாஷ் இச்சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வீரா மற்றும் கீர்த்தனா மீது உரிய நடவடிக்கை வேண்டி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மோசடி மற்றும் மிரட்டல் உள்ளிட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார் போலி வழக்கறிஞரான வீரா மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர் கீர்த்தனா ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:’வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது!!