சென்னை: தண்டையார்பேட்டை, அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (41), இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு தண்டையார்பேட்டை காவல் நிலைய எல்லையில் வீரா என்பவரை கொலை செய்த வழக்கில், போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து, சுமார் 12 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் இருந்த ஹரிகிருஷ்ணன் கடந்த ஆண்டு 5 நாட்கள் பரோலில் வெளியில் வந்து சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் அவரது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
அதனையடுத்து பரோல் காலம் முடிந்து ஹரி கிருஷ்ணன் சிறையில் ஆஜராக சேலம் மத்திய சிறைக்கு வந்துள்ளார். இதையடுத்து, ஹரி கிருஷ்ணன், சிறை வார்டன் ராமகிருஷ்ணனின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சாப்பாடு வாங்கி வருவதாகக் கூறி சென்றுள்ளார். பின்னர், நீண்ட நேரம் ஆகியும் ஹரிகிருஷ்ணன் வராததால் சந்தேகம் அடைந்த போலீசார், விசாரணை செய்ததில் அவர் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.
அதனையடுத்து, தனிப்படை போலீசார் ஹரிகிருஷ்ணனை தீவிரமாகத் தேடி வந்தனர். ஆனால், ஹரிகிருஷ்ணன் போலீசாரிடம் சிக்காமல் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் ஒரு ஆண்டுக்கு மேல் தலைமறைவாகி இருந்துள்ளார்.
இந்நிலையில், ஹரிகிருஷ்ணன் கோயம்புத்தூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் திருச்செந்தூருக்குச் சென்று ஹரி கிருஷ்ணனை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். பின்னர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தாம்பரம் காவல் ஆணையத்திற்குட்பட்ட பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் ஹரிகிருஷ்ணனை ஒப்படைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, ஹரிகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சேலம் மாவட்டத்தின் ரவுடி மூக்கன் செல்வம் மற்றும் சென்னையின் ரவுடிகள் ஈஷா ஈஸ்வரன், எலி யுவராஜ் ஆகியோரின் உதவியில் ஹரிகிருஷ்ணன் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. மேலும், ஹரி கிருஷ்ணன் மீது செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (nbw) நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
மேலும், குற்றவாளி ஹரிகிருஷ்ணனுக்கு வாகனம் கொடுத்து தப்பிச் செல்ல காரணமாக இருந்த சேலம் மத்திய சிறை ஜெயில் வார்டன் ராமகிருஷ்ணன் என்பவர் வேலையில் இருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், குற்றவாளி ஹரிகிருஷ்ணன் மீது வழக்குகள் பதிவு செய்து மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பிகாரின் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு; சமூக நீதியை மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு? - அன்புமணி ராமதாஸ் கேள்வி