சென்னை: கரோனா தொற்று பரவல் காரணமாக குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் பணி, ஆய்வுப் பணி, புதிய அட்டைகள் அச்சிடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பணிகள் இன்று மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " கரோனா நிவாரணத் தொகை இரண்டாவது தவணை ரூ. 2000 உடன் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஜுன் மாதம் தமிழ்நாடு அரசு வழங்கியது.
இதனை பெற ரேஷன் கடைகளுக்கு மக்கள் வரும் போது கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, நிவாரண பொருட்களை தாமதமின்றி வழங்க கைரேகை முறை நிறுத்தி வைக்கப்பட்டது. கரோனா பரவல் காரணமாக புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கரோனா நிவாரணத் தொகை, 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் பணி இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 1) ஆம் தேதி முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் பணி, ஆய்வுப் பணி, புதிய அட்டைகள் அச்சிடும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. அதனுடன் ரேஷன் பொருட்களை பெற்றுச் செல்ல கை ரேகை முறைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீட்டுவசதி துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் - அமைச்சர் சு.முத்துசாமி