சென்னை: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் சாதிச் சான்றிதழில் வளமான பிரிவினரை (Creamy layer) நீக்குதல் தொடர்பான, வருமான வரம்பை கணக்கிடுதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில், இந்திய அரசுப்பணியிடங்களுக்கான நியமனங்கள் மற்றும் ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கையில், இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வளமான பிரிவினரை நீக்கி வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் இந்திய அரசால் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. வளமான பிரிவினரை நீக்குவதற்கான நெறிமுறைகளும் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
வளமான பிரிவினரை நீக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமானத்தைக் கணக்கிடும்போது, ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தைச் சேர்க்கக் கூடாது என வழிகாட்டு நெறிமுறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
'சாதிச்சான்றிதழுக்கான உரிய வழிகாட்டுநெறிமுறைகளைப் பின்பற்றுக'
கடந்த 1993ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பெற்றோர்களது ஆண்டு வருமான வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு ரூ.8 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்க அறிவுத்தப்பட்டும், ஓபிசி வகுப்பினர் சாதிச்சான்றிதழ் பெறுவதில் சிக்கல் உள்ளது அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அந்த வகுப்பினர், அரசின் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற முடியாத சூழல் ஏற்படுகிறது.
இதனால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வளமான பிரிவினரை நீக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ. 8 லட்சம் என்ற பெற்றோரின் ஆண்டு வருமானத்தைக் கணக்கிடும் போது ஊதியம் மற்றும் விவசாயம் ஆகியவற்றிலிருந்து பெறும் வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதிச் சான்றிதழை கால தாமதமின்றி வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், சாதிச் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தூய்மைப் பணியாளர்களுக்குத் தனி ஆணையம் வேண்டும்'