சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று(மே26) பிரதமர் நரேந்திர மோடி ரூ.31,530 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,ஆளுநர் ரவி, தமிழ்நாடு அமைச்சர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி மேடையில் நிகழ்த்திய உரை: ’தமிழ்நாடு வணக்கம்’ எனத் தெரிவித்து பேசத் தொடங்கினார். ’செந்தமிழ்நாடு எனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ என்ற பாரதியாரின் பாடலை சுட்டிகாட்டி பேசினார்.
ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த யாரேனும் ஒருவர் தலைசிறந்து விளங்குகிறார்கள். சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று நடந்த போட்டியில் இந்தியா சார்பில் வெற்றி பெற்ற 11 பதக்கங்களில் 6 பதக்கங்களின் பங்கு தமிழ்நாட்டினைச் சார்ந்தது.
புத்தாண்டு மற்றும் பொங்கல் தமிழ்நாட்டில் ஆர்வம் நிறைந்த நிகழ்ச்சி. தமிழ்நாட்டில் வளர்ச்சியில் மேலும் ஒரு பயணமாக இன்று 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு இங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மதுரவாயல் துறைமுகம் உயர்மட்ட சாலை திட்டத்தால் சென்னை மாநகரம் போக்குவரத்தில் மிகப்பெரிய அளவில் மேம்பாடு அடையும். பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் 1152 பேருக்கு வீடுகள் கிடைப்பது பெருமையாக இருக்கிறது.
நாட்டின் பல்வேறு இடங்களிலும் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா திட்டத்தை இந்த அரசு முனைப்புடன் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு உருவாகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.
சமூக கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் அடையும். ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீரை கொண்டு சேர்ப்பதற்கு உழைத்து கொண்டு இருக்கிறோம்.
அதிவேக இணைய சேவையை நாட்டின் கிராமப்புற ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சேர்ப்பதே எங்களின் தொலை நோக்கு திட்டம். தமிழ் மொழியையும், கலாசாரத்தையும், மேம்படுத்த இந்திய அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரியில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடங்கியது. அதற்கு முழுமையான பணத்தை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்கள் அவர்களின் மொழியிலேயே படிக்கலாம். இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள், அவர்கள் தாய்மொழியில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவப் படிப்புகள் படிக்க முடியும். யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் நான் தான்.
75 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா என்ற பயணத்தை தொடங்கினோம். சுதந்திரப் போராட்ட தியாகிகள் வளர்ந்த இந்தியாவை காண நிறைய கனவுகள் கண்டனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை வளமானதாகவும், வளர்ச்சியாகவும் மாற்ற பாடுபடுவோம்’ எனத் தெரிவித்தார்.இதையும் படிங்க:'ஒருபுறம் பாரத் மாதா கி ஜெ... மறுபுறம் கலைஞர் வாழ்க..!' - திக்குமுக்காடிய நேரு அரங்கம்!