சென்னைக்கு வரும் 14ஆம் தேதி வருகை தரவிருக்கும் பிரதமர் மோடி சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மொட்ரோ ரயில் சேவை, சென்னை கடற்கரை - அத்திப்பட்டு நான்காவது வழித்தடம், விழுப்புரம்- தஞ்சாவூர்- திருவாரூர் ஒரு வழிப்பாதை மின்மயமாக்குதல் திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் எம்பிடி அர்ஜுனன் எம்.கே - 1 ஏ (MBT Arjun Mk - 1A) கவச வாகனத்தை ராணுவத்திடம் ஒப்படைக்கவுள்ளார். அதனை தொடர்ந்து கல்லணை கால்வாய் புதுபித்தல், நவீனப்படுத்தும் திட்டம், சென்னை இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கரை வளாகம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவுள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், அரசு துறைகளின் முதன்மை செயலாளர்கள், அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று(பிப்.10) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காவல் துறை தலைவர் திரிபாதி, அரசுத் துறை செயலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
முன்னதாக தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி, நிதி கோருவது தொடர்பாக கடந்த ஜனவரி 19ஆம் தேதி டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தருமாறு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்! - அனைத்துக்கட்சிகள் வலியுறுத்தல்!