சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”இன்று நடைபெறுவதாக இருந்த 36ஆவது ஜி.எஸ்.டி கூட்டம் மத்திய நிதி அமைச்சர் கலந்துகொள்ள இயலாததால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கூட்டம் நடைபெறும்போது பேட்டரி வாகனங்களுக்கான வரியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்கவும், பேட்டரி வாகன சார்ஜர்களுக்கான வரியை 18 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக குறைக்கவும் மத்திய அரசுக்கு நிச்சயம் அழுத்தம் தரப்படும். அப்படி குறையும்பட்சத்தில் பேட்டரி வாகனங்களுக்கான விலை எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளது” என்றார்.
இதனையடுத்து, வேலூர் தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றி பெற்றுவிட்டதை மக்கள் உணர்ந்துவிட்டதால், மக்கள் நிச்சயம் நல்ல முடிவை அளிப்பார்கள் என்றார்.