சென்னை: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை (ஆகஸ்ட் 2) சென்னை வர உள்ளார். மாலையில் சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெறும் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
விழா முடிந்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்து விட்டு மறுநாள் (ஆகஸ்ட் 3) காலை தனி விமானம் மூலம் கோவை செல்கிறார்.
சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்
அவரின் வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலக வளாகம், சட்டப்பேரவை மண்டபம் உள்ளிட்ட இடங்களில் சென்னை காவல் அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறையினர், கமாண்டோ படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை உட்பட 5,000 காவல்துறையினருடன் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருணாநிதி உருவப்படம் திறப்பு விழா: குடியரசு தலைவருக்கு அழைப்பிதழ் வழங்கிய சபாநாயகர்