கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பேருந்துகள் செயல்படாமல் இருந்த நிலையில், இன்று முதல் பேருந்துகள் செயல்படுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 5689 பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இயக்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம் மாநில எல்லை ஒட்டி இருப்பதால், இன்று பேருந்துகள் இயக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியருடன் இன்று ஆலோசனை மேற்கொண்டு நாளை முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னையில் மாநகர பேருந்துகள், SETC பேருந்துகள் இயக்கப்படவில்லை. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பேருந்துகளுக்கான டிக்கெட் விலை ஏற்றம் இப்போது இல்லை. சென்னை தலைமைச் செயலகம் வரும் இரண்டு மாநகர பேருந்துகளில் சோதனை அடிப்படையில் பே.டி.எம் ஆன்லைன் மூலம் பேருந்து டிக்கெட்களை வழங்கி வருகின்றனர். ஆன்லைன் வசதி இல்லாதவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி கொள்ளலாம்
விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் 01.06.2020 முதல் 50 விழுக்காடு பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் வரையறுக்கப்பட்ட மண்டல எல்லையான Zone-llஇல் 121 நகர தட பேருந்துகளும், 102 புறநகர பேருந்துகளும், Zone-lll இல் 274 நகர தட பேருந்துகள், 549 புறநகர பேருந்துகளும், 11 மாலை வழித்தட பேருந்துகள் என மொத்தமாக 1057 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது'' எனத் தெரிவித்தார்.
அரசு வழிகாட்டுதலின்படி கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
- அனைத்து பேருந்துகளும் பணிமனையைவிட்டு செல்லும்போதும், நடைமுடிந்து பணி மனைக்குள் வரும்போதும் பேருந்தின் உள்புறம் மற்றும் வெளிப்புற பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.
- ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பேருந்து இயக்குவதற்கு முன் கிளையின் நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்து காய்ச்சல் இல்லையென்றால் மட்டுமே பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
- ஓட்டுனர், நடத்துநர்கள் பணியில் முகக்கவசம், கையுறை அணிந்து பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
- ஓட்டுநர் நடத்துனர்கள் ஒவ்வொரு நடை முடிவின்போதும் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ள சோப்பு வழங்கப்பட்டுள்ளது.
- பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுவருகிறது. முகக்கவசம் அணிய தவறும்பட்சத்தில் பயணிகள் பயணம் செய்யவும் அனுமதி மறுக்கப்படுகிறது.
- ஒவ்வொரு பேருந்திலும் சானிடைசர் மூலம் பயணிகளின் கைகளை சுத்தப்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
- பயணிகள் பேருந்தின் பின்புற படிகட்டுவழியாக ஏறவும் மற்றும் முன்புற படிகட்டு வழியாக இறங்கவும், பேருந்தின் உள்புறத்தில் தகுந்த இடைவெளியுடன் அமர வைத்து நடத்துநரின் கண்காணிப்பில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.