சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டு இருக்கும் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மிக்ஜாம் புயல் நாளை 5ம் தேதி காலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்று (டிச.04) மிகக் கனமழை எச்சரிக்கையும் அளிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு புயலை எதிர்கொள்வதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனைகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும், மழையால் பல்வேறு நோய்கள் வரும் அபாயமும் உள்ளது. பெரும்பாலான இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால் தண்ணீரால் வரக்கூடிய நோய் தொற்றும் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இந்த நிலையில் பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மாவட்ட துணை இயக்குநர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “மழையினால் மின்சாரம் தாக்குதல், குப்பைகளால் ஏற்படும் நோய்கள், பாம்புக்கடி, விலங்குகள், பூச்சிகள் கடித்தல், இன்புளூயன்சா மற்றும் கரோனா தாெற்றுக்குப் பின்னர் வரும் சுவாச வழி தொற்றுகள் ஆகியவை மழையின் போது ஏற்படும்.
மழையைத் தொடர்ந்து நீரினால் பரவக்கூடிய டைப்பாய்டு, பாதங்களில் சேற்றுப் புண், கண் நோய் தொற்று, மலேரியா, டெங்கு, சிக்கன்குன்யா போன்ற நோய்கள் வரலாம். எனவே மருத்துவமனைகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். அவசர கால மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். நிவாரண மையங்களில் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவையான அளவு கிருமி நாசினி மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்குச் சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்க வேண்டும். குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசர கால மருந்துகளைத் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
சுகாதார மையங்களில் 24 மணி நேரம் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய எரிபொருள் உடன் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக்கால முகாம்களின் தங்க வைக்கப்படுபவர்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். முகாம்களைச் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
சுத்தமான உணவு உட்கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூக இடைவெளி, முக கவசம் அணிதல், கைகளைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். அதிக கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும்” உள்ளிட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேலூர் மத்தியச் சிறையில் கைதி தற்கொலை.. சிறைக் காவலர்கள் மூவர் பணியிடை நீக்கம்..!