தமிழ்நாட்டில் மே 5ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளை மாணவர் நலன்கருதி ஒத்திவைப்பதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த, அறிவிப்பினை இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இது குறித்து இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா. ஜனார்த்தனன் விடுத்துள்ள அறிக்கையில்,
"கரோனா நோய்ப் பரவல் தீவிரம் காரணமாக மத்திய அரசு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பிற்கான தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. மேலும், 10ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது.
எனவே மாணவர்கள் நலனைக் கருத்தில்கொண்டு மே 5ஆம் தேதிமுதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்விடுத்திருந்தது.
பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு அரசு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், செய்முறைத் தேர்வுகள் மட்டும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளதை இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் வரவேற்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கரோனா தடுப்புப் பொருள்கள் வழங்கிய தனியார் நிறுவனம்!