தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் வரும் 16ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு முன்னதாக அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பள்ளிகள் திறப்பு குறித்துக் கடந்த 9ஆம் தேதி அன்று பெற்றோர்களுடன் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பொற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தி, பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறுகையில், “தமிழ்நாட்டில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கலாமா? என்று பெற்றோர்கள் கருத்துக் கேட்புக்கூட்டம் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. இதில் பெரும்பாலான பள்ளிகளில், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்துகொள்ளவில்லை. அவ்வாறு கலந்து கொண்டவர்களும் இருவேறு கருத்துக்களை கூறியுள்ளனர். இதனால் பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்காமல், மருத்துவர்களின் முறையான ஆலோசனையைப் பெற்று, தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க வேண்டும்.
குறிப்பாக தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் பள்ளிகளை உடனடியாக திறந்தால் கரோனா தொற்றின் தீவிரம் அதிகரிக்கும். மேலும் வரக்கூடிய மழைக்காலங்களில் பள்ளிகளில் மாணவர்களிடம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது என்பது சிரமமான காரியம் என்பதைக் கருத்தில்கொண்டு, இன்னும் சில மாதங்களுக்குப் பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க வேண்டும்.
குறிப்பாக பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு பள்ளிகளைத் திறக்க வேண்டும். பல நாடுகளில் கரோனாவின் இரண்டாம் அலை வீசுவதாகக் கூறப்படும் இந்தச் சூழலில், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் நலன் கருதி இன்னும் சில மாதங்கள் கழித்து பள்ளிகளை திறக்க அரசு முடிவு எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் இரண்டாயிரம் மினி கிளினிக்குகள்' முதலமைச்சர் அறிவிப்பு