சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் சித்ரா (29). இவர் தனியார் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து பிரபலமாக இருந்து வந்துள்ளார். கரையான்சாவடி பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஹேமந்த்நாத்துடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனால் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயம் செய்யப்பட்டது.
இதற்கிடையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு இருவரும் முன்பு பதிவு திருமணமும் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ஹூட்டிங் பூந்தமல்லி ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்து வருவதால் கோட்டூர்புரத்திலிருந்து பூந்தமல்லியில் நடக்கக்கூடிய படப்பிடிப்புக்கு வந்து செல்ல சிரமமாக இருந்ததால், சித்ரா கடந்த 4ஆம் தேதி முதல் நசரத்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நிச்சயிக்கப்பட்ட ஹேமந்த்நாத்துடன் தங்கி வந்தார்.
இந்நிலையில் நேற்று (டிசம்பர்-9) அதிகாலை 2.30 மணிக்கு ஹூட்டிங் முடித்துவிட்டு தங்கும் விடுதிக்கு வந்த சித்ரா குளிக்க செல்வதாக ஹேமந்த்நாத்திடம் கூறிவிட்டு தனது அறையை பூட்டிக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். ஹேமநாத் தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் நடிகை சித்ரா கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஹேம்நாத்துடன் பதிவு திருமணம் செய்திருப்பதால், ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினர். உயிரிழந்த சித்ராவின் முகத்தில் கீறல் இருந்ததால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சித்ராவின் தாயார் ஹேமந்த்நாத் தன்னுடைய மகளை கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
இதனால் சித்ரா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்த நிலையில், காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து சித்ராவின் குடும்பத்தினர், ஹேமந்த் உடன் பணிபுரிய கூடிய நபர்கள் என அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சித்ரா கடைசியாக யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து அவரது செல்போனை ஆராயும்போது அவரது தாயாரிடம் பேசியது தெரியவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பு ஹேமந்துடன் ஒன்றாக இருப்பதை சித்ராவின் குடும்பத்தினர் கண்டித்து வந்ததாகவும், நிச்சயிக்கப்பட்ட பின்பு அடிக்கடி நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சித்ரா சென்று வருவதால் கணவர் ஹேமந்த் மற்றும் குடும்பத்தினர் சித்ராவை கண்டித்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஹேமந்த் உடனடியாக பதிவு திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் திடீரென்று ஹேமந்த்துடன் சித்ரா சென்றதால் அவரது தாயார் மற்றும் தந்தை சித்ராவிடம் சண்டையிட்டு வந்ததாகவும், காவல்துறை விசாரணையில் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று (டிசம்பர்-10) காலை 11.30 மணிக்கு உடல்கூரய்வு நடைபெற்றது. இதன்பிறகு மருத்துவ நிர்வாகம் தரப்பில், சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
சித்ரா கன்னத்தில் இருந்த காயம், அவர் தூக்குப் போட்டபோது வலியால் கையை உதறியதால் சித்ராவின் கை நகங்களால் ஏற்பட்ட காயம் என தெரியவந்துள்ளது. சித்ரா தற்கொலை செய்துகொள்ள காரணம் என்னவென்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.