சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவை இன்று (ஏப்.22) சந்தித்து மனு அளித்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ஜெயக்குமார் "அதிமுக சார்பில் கோரிக்கை மனு ஒன்றினை வழங்கியுள்ளோம்.
அதில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் மட்டும்தான் தபால் வாக்குகளை எண்ண வேண்டும். அதற்கு முன்னதாக எந்த சூழலிலும் தபால் வாக்குகளை மே 1ஆம் தேதி திறக்க கூடாது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதுதான் அந்த வாக்குகள் எண்ணப்பட வேண்டும். சில மாவட்டங்களில் தபால் வாக்குகள் முன்கூட்டியே எண்ணப்பட வாய்ப்பு உள்ளதாக எங்கள் வேட்பாளர்கள் கட்சியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள்.
இதுகுறித்து தற்போது தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் யாரும் குறை சொல்லாத அளவுக்கு வாக்கு எண்ணிக்கையை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், எந்த காரணத்தை கொண்டும் மேஜைகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது. பின்னர், வாக்கு எண்ணிக்கையின் போது கடந்த கால விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்" என்றார்.