தேர்தலின்போது நாட்டின் பாதுகாப்புப் படைகளில் உள்ளவர்கள், வெளிமாநில, மாவட்டங்களில் பணிபுரியும் காவல் துறை, ஆயுதப்படையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் ஆகியோர் வாக்களிப்பதை உறுதிசெய்யும்விதமாக அஞ்சல் வாக்குகளைப் பதிவுசெய்யும் நடைமுறை தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அஞ்சல் வாக்குப்பதிவு செய்யும் வசதியை வழங்குவதென தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
அஞ்சல் வாக்கைப் பெறுவதற்காகச் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர் நேரில் சென்று வாக்காளர்களிடம் விண்ணப்பத்தை வழங்க வேண்டும் என விதி உள்ளதால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அரசுக்குப் பொருளாதாரச் சுமை அதிகரிக்கும் எனக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதேபோல், மாற்றுத்திறனாளிகள் சங்கம், துரை என்பவர் சார்பில் வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களில், "80 வயதுக்கு மேலானவர்களைச் சரிபார்க்க எந்த நடைமுறையும் இல்லை. இந்தப் புதிய நடைமுறை கள்ள ஓட்டுக்கு வழி வகுக்கும். இது சம்பந்தமாகத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் பிறப்பித்த உத்தரவுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும். அந்த உத்தரவுகளை ரத்துசெய்ய வேண்டும்" எனக் கோரப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த 86 வயது முதியவர் துரை தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் விடுதலை, "சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டும்" என வாதிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் சங்கம் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுவிட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது என வாதிட்டார். திமுக தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்தப் புதிய நடைமுறை காரணமாக ரகசியமாக வாக்களிக்கும் முறை பாதிக்கப்படும். இதன்மூலம் 30 விழுக்காடு பேர் அஞ்சல் வாக்குகளைப் பதிவுசெய்யக் கூடும்" என்று குறிப்பிட்டார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் தரப்பு கருத்தைக் கேட்காமல் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டனர். அதேசமயம், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு - இந்திய தேர்தல் ஆணையம்