சென்னை அருகேயுள்ள பூந்தமல்லியில் சவிதா பல் மருத்துவக் கல்லூரியில் சர்வதேச பல் மருத்துவக் கருத்தரங்கு தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
மூன்று நாள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் இலங்கை, நேபாளம் மற்றும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த பல் மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், பல் மருத்துவத் துறையிலுள்ள வேலைவாய்ப்புகள் பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "பல் மருத்துவப் படிப்பு என்பது மருத்துவத் துறைக்கு இணையான ஒரு படிப்பாகும். எனவே, பல் மருத்துவம் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் முதலமைச்சர் ஒப்புதலோடு தாலுகா வாரியாக பல் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.
இதனுடன் சேர்த்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் பல் மருத்துவக் குழுவும் தொடங்குவதற்கு விரைவில் அறிவிப்பாக அரசாணை பிறப்பிக்கப்படும். ஐயாயிரத்து 724 பேர் மருத்துவர்கள், செவிலியர்கள் இன்றைக்கு மெகா நியமனம் செய்யப்பட்டனர்.
புதிதாக பெறப்பட்டுள்ள ஒன்பது புதிய அரசு மருத்துவக் கல்லூரியில், ஒரு மருத்துவக் கல்லூரிக்கு 300 மருத்துவர்கள் 600 பாராமெடிக்கல் செவிலியர்கள் என 900 புதிய மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்படும். இவையனைத்தும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படும்.
கூடுதலாக மேலும் நான்கு மருத்துவக் கல்லூரிக்கான கோரிக்கையை மத்திய அரசிடம் வழங்கியுள்ளோம். அதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நான்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் அழகிரி: தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு... களேபரமான கூட்டம்!