பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக கரும்பு, பச்சரிசி, முந்திரி உள்ளிட்ட பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடி 30 ஆயிரத்து 431 அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு கொடுக்க திட்டமிடப்பட்டு, தற்போதுவரை 1 கோடியே 89 லட்சத்து 70 ஆயிரத்து 686 குடும்பங்களுக்கு பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 லட்சத்து 59 ஆயிரத்து 745 குடும்பங்களுக்கு இன்று மாலைக்குள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் பணம் நேற்று மாலை 6 மணி வரை 94.71 விழுக்காடு பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசு வாங்குவதற்கான கால அவகாசத்தை 21ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை உணவுப் பொருள்கள் வழங்கல் துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க : தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்