சென்னையை அடுத்த பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் துறையினர், மாதிரி கிராமத்தை உருவாக்கி பொங்கல் விழாவைக் கொண்டாடினர். இந்த விழாவில் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், அவரது மனைவியும் காவல்துறை அலுவலருமான சீமா அகர்வால், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் பிரபாகர் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
பின்னர் ஆணையர் விஸ்வநாதன் தலைமையில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து கிராமப்புற விளையாட்டுகளை காவல் துறையினர் குடும்பங்களுடன் விளையாடி மகிழ்ந்தனர். குறிப்பாக காவல் துறையினருக்கான கயிறு இழுக்கும் போட்டியும் அவர்களது குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் ஆணையர் விஸ்வநாதன் பேசுகையில், "சென்னையில் பணிபுரியும் காவல் துறையினர் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் கொண்டாட முடியாத நிலை ஏற்படும். எனவே, அவர்களின் ஊரில் கொண்டாடுவதைப் போன்று இங்கும் பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதற்காக சென்னை நகரில் காவல் துறையினர் மாதிரி கிராமத்தை உருவாக்கியுள்ளனர். காவல் துறை நினைத்தால் செய்ய முடியாத விசயமே இல்லை.
நான் இங்கு சிறு வயதில் சாப்பிட்ட ஜவ்வு மிட்டாயை சாப்பிட்டேன். அது என்னுடைய ஏழு வயதில் நடந்த சம்பவங்களை நினைவுப்படுத்தின. காவல்துறை குடும்ப பொங்கல் விழா முலம் அனைவரும் ஒரே குடும்ப என்ற உணர்வை ஏற்படுத்துகிறது" என்றார்.
இதையும் படிங்க: காணும் பொங்கலை முன்னிட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!