சென்னை: அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று (அக்.05) காலை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் 66 பேர், மாநில நிர்வாகிகள் 65 பேர், மாநில அணி பிரிவு 38 பேர், மாவட்ட பார்வையாளர்கள் 41 பேர் என மொத்தம் 221 பேர் வரை பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, “அடுத்த 7 மாத காலத்திற்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. தீவிரமாக உழைக்க வேண்டும், கடமை நமக்கு உள்ளது ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தின் போது மத்திய அரசுத் திட்டங்களால் பலனடைந்த பயனாளிகளை அழைத்து வந்து பேச வைக்க வேண்டும்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒன்றரை கோடி மகளிருக்கு வழங்கும் வகையில் விரிவுபடுத்த வலியுறுத்தி போராட்டங்களை நடத்த வேண்டும். அடுத்த 7 மாத காலம் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டும். பெண்களை அதிகளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும், பெண்கள் சென்று வாக்கு சேகரிக்கும்போது கண்டிப்பாக வாக்காளர்கள் வாக்கை மாற்றி போடமாட்டார்கள்.
ஒவ்வொரு சட்டப்பேரவையில் உள்ள முக்கியஸ்தர்கள், அதாவது கீ ஓட்டர்ஸ் பட்டியலை தயாரிக்க உத்தரவு அரசு நடத்தும் கிராமசபை கூட்டம் போல பாஜக சார்பில் வரும் 15ஆம் தேதி ஒவ்வொரு கிளைகள் தோரும் ‘கூடுவோம் கூட்டுவோம்’ எனும் கூட்டத்தை கூட்டி மக்கள் பிரச்னைகளை கையில் எடுப்போம். கூட்டணி முடிவை டெல்லி தான் முடிவெடுக்கும். என் கருத்தை நான் ஆழமாக தேசிய தலைமையிடம் கூறிவிட்டேன் இனி முடிவு தேசிய தலைமை தான் எடுக்க வேண்டும்” என்றார்.
பின்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ‘கட்சியை எப்படி பலப்படுத்த வேண்டும் 2024 தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பத்திரிகையாளர் சந்திப்பில் விவாதிக்கப்பட வேண்டிய விடயம் இல்லை. இது கட்சித் தலைவர்களுடன் உள்ளரங்கில் விவாதிக்கப்பட வேண்டியது.
மிகப்பெரிய அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை இங்கிருந்து அனுப்பி வைப்போம், பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியை பிரதானப்படுத்தி, 2024 தேர்தலில் மிகப்பெரிய மாற்றங்களை முன்னெடுக்கும். 2024 தேர்தலில் வெற்றி பெறுபவர்களையும் வாக்கு விழுக்காட்டையும் பார்க்கலாம்.
கூட்டணியில் யார் இருந்தாலும், இல்லை என்றாலும் வருத்தப்படப்போவது இல்லை. என்னுடைய ஒரே நோக்கம் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்துவது தான். 2024 தேர்தலில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் போட்டி, மற்ற கட்சிகளுக்கு சக்தி இல்லை. அந்தந்த கட்சிகள் அந்தந்த கட்சியின் வளர்ச்சியை தான் பார்க்கும். பாரதிய ஜனதா கட்சி, அதன் வளர்ச்சியை பார்க்கும் கூட்டணியில் யார் இருந்தாலும் போனாலும் வருத்தப்படப் போவதில்லை” என தெரிவித்தார்.
தொடர்ந்து, அண்ணாதுரை பற்றி நீங்கள் பேசியது சரி என்று சொல்கிறீர்களா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “அது குறித்து பேச விருப்பமில்லை” என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “2024 தேர்தல் எங்களுடைய காலம் எங்களுடைய தேர்தல் அதற்காக பணியாற்றுவோம் இன்று ஆளும் கட்சியாக திமுக உள்ளது அது குறித்து குறை சொல்லலாம் 1998ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடங்கப்பட்டது. அதன் தன்மை வேறுபட்ட காலங்களில் மாறி இருக்கிறது” என்றார்.
அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தடையாக இருந்ததாக நத்தம் விஸ்வநாதன் சொன்னது குறித்த கேள்விக்கு, “யார் வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்தார்கள் என்று யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால், பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக தமிழ்நாட்டில் வளர்ந்து இருக்கிறது. அதற்கு மாற்று கருத்தே கிடையாது.
திமுக மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ளது. பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ளது. இது இரண்டுக்கும் தான் போட்டி, மத்தியில் பத்தாண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்தோம். நாங்கள் செய்தததை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். திமுக செய்திருக்க கூடிய சாதனைகளை மக்கள் முன் வைக்கட்டும் நாங்களும் எங்கள் சாதனைகளை முன் வைக்கிறோம், 2024 தேர்தல் திமுக வெர்சஸ் பாஜக தான். பாஜகவின் சண்டை திமுகவோடுதான். யாருடன் சண்டை போட வேண்டும் என்று தெளிவாக உள்ளோம்” என்றார்.
கூட்டத்திற்குப் பிறகு பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் காலை தொடங்கி நடைபெற்றது. வரும் நாடாளுமன்ற தேர்தலில், என்னென்ன விடயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பேசப்பட்டது.
மாநில தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் தொண்டர்களுக்கு நல்ல வழியை காட்டியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிகரமாக அடி எடுத்து வைக்க வேண்டும், மூன்றாவது முறை பிரதமராக மோடி பொறுப்பேற்க வேண்டும். வரும் 7 மாதங்களும் என்னென்ன விடயங்கள் ஈடுபட வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து, பத்திரிகையாளர்களை மரியாதை இன்றி மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “எங்கள் மாநிலத் தலைவருக்கான மரியாதையை கொடுத்து, முறைப்படி அவரிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் தரக்கூடிய மரியாதையே பாஜக மாநில தலைவருக்கும் கொடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: "2024 தேர்தல் திமுக vs பாஜக தான்" - அண்ணாமலை அதிரடி