சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நாளை (ஏப்ரல் 21) வரை நடைபெறுகிறது. நேற்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, வால்பாறையில் பாலிடெக்னிக் கல்லூரி துவங்க அரசு முன் வருமா எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் கேரள எல்லை வரை விரிந்துள்ள வால்பாறை தொகுதியில் பாலிடெக்னிக் கல்லூரிக்கு, 100 கி.மீ பயணித்துச் செல்ல வேண்டி உள்ளதால் ஏழை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குழந்தைகள் படிப்பதற்கு பாலிடெக்னிக் கல்லூரி வேண்டும் என்று கேட்டார்.
அதற்குப் பதில் அளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ”கடந்த திமுக ஆட்சியில் 2006இல் வால்பாறை தொகுதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனாலும் அங்கும் மாணவர் சேர்க்கை இல்லாமல் பல இடங்கள் காலியாக உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளைப் பொறுத்த வரை கடந்த 2010-11இல் அப்போதைய திமுக ஆட்சிக் காலத்தில் 1,16,687 பேர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தனர்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து, 2020இல் 59,350 ஆக குறைந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில், நான் முதல்வன், புதுமைப்பெண் ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால், 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து 2022இல் 1,20,090 மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
மேலும் தொழில்துறை 4.0 தரத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அனைத்து கல்லூரிகளிலும் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 618 கோடி வரை வருடத்திற்குச் செலவாகிறது. சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை குறித்து வருங்காலத்தில் நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் ஆட்சியில் புதிய சட்டமன்றம்: அமைச்சர் துரைமுருகன்