சென்னை: தமிழ்நாடு உயர் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், மாநிலத்தில் உள்ள பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளின் பாடத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திடமிருந்து கருத்துகளை பெற்று பல வகை தொழில்நுட்ப கல்லூரிகளின் பாடத்திட்டத்தினை மறு சீரமைப்பு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பாடத்திட்ட மறுசீரமைப்பானது, மாணவர்களின் வேலை வாய்ப்பு திறனையும், தொழில் முனையும் திறனையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்த புதிய பாடத்திட்டமானது வரும் 2023-24 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி நிறுவனம் அடுத்து ஆண்டு முதல் தொலைதூர முறையில் பி.எஸ்.சி (டேட்டா சயின்ஸ்) மட்டும் எம். பி .ஏ (டேட்டா அனலைடிக்ஸ்) போன்ற வளர்ந்து வரும் துறைகளில் புதிய படிப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் திட்டம் மூலம் மாணவியரின் சேர்க்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 29 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2021-22ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவியரின் சேர்க்கை எண்ணிக்கை 71,008 ஆக இருந்தது. புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்திய பின் 2022-23 கல்வியாண்டில் மாணவியின் சேர்க்கை எண்ணிக்கை 91,485 ஆக உயர்ந்துள்ளது. வறுமை காரணமாகவும், வேறு காரணங்களாகவும் படிப்பை இடைநிறுத்திய மாணவியர், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மீண்டும் உயர் கல்வியை தொடர்ந்து பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.
சென்னை மாநில கல்லூரியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு புதிய விடுதி கட்டடங்கள் மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் மாபெரும் அரங்கம் சுமார் 63 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் கட்டுவதற்கு அரசு சார்பில் சுமார் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 55 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்றவாறு அந்த கல்லூரிகளில் ஆய்வகங்கள், வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் இதர வசதிகளை மேம்படுத்த பெருந்தலைவர் காமராஜர் கல்லூரிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் கட்டுவதற்கு அரசு சார்பில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
கடந்த 2 ஆண்டுகளில் புதியதாக தொடங்கப்பட்ட 20 அரசு கல்லூரிகளில், 10 அரசு கல்லூரிகளில் நிரந்தர கட்டடங்கள் கட்ட 128.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு 8.36 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு சேர்க்கை பெற்ற 79,139 மாணவர்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 93,290 மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
மின் உபகரணங்களை நிறுவுதல், தொழிலகக் கட்டுப்பாடுகள், தொழிலகத் தானியக்கமாக்கல், கட்டடத் தானியக்கமாக்கல் போன்ற உலகத் திறன்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கு திறன்களை மேம்படுத்துவதற்கு சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, மயிலாடுதுறை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள 6 அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஸ்னைடர் எலக்ட்ரிக் இந்திய நிறுவனத்துடன் இணைந்து 10 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதி உதவியுடன் உலக தரத்துடன் அகாடமி மற்றும் நவீன தொழில்நுட்ப உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
2021-22 ஆம் கல்வியாண்டில், 7,876 அரசுப் பள்ளி மாணவர்கள், 7.5 சதவிகித சிறப்பு உள் இடஒதுக்கீடு திட்டத்தின் கீழ் பொறியியல் சேர்க்கை பெற்றுள்ளனர். 2022-23 ஆம் கல்வியாண்டில், 8,771 அரசுப் பள்ளி மாணவர்கள் பொறியியல் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள CEG, MIT, ACT மற்றும் SAP ஆகிய துறைகளில் 161 அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். 2021-22 ஆம் கல்வியாண்டில் 1,46,559 மாணவர்களுக்கு, ரூ.353.34 கோடியும், 2022-23 ஆம் கல்வியாண்டில் 1,45,695 மாணாவர்களுக்கு ரூ.356.11 கோடியும், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கான கட்டணச் சலுகையாக வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விழுப்புரம் வானூரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படுமா? - அமைச்சர் பொன்முடியின் பதில் என்ன?