பொள்ளாச்சி பாலியல் பயங்கரவாத சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கொடூர கும்பலிடம் சிக்கி, கொடுமையை அனுபவிக்கும் காணொளி வெளியாகி பலரையும் கலக்கமடையச் செய்தது. மீண்டும் இந்த விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் ஆகிய நால்வரும் கோவை மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
![SOUTH INDIAN FILM ASSOCIATION](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/2690258_593_842512e0-59f2-4c42-aa8b-4db96f7176bf.png)
இந்த நிலையில், தினமும் அது தொடர்பான காணொளிகள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது குற்றவாளிகள் திருநாவுக்கரசு, சபரி ராஜன் ஆகிய இருவரையும் பாதிக்கப்பட்ட உறவினர்களும், குற்றவாளிகளின் நண்பர்களும் தாக்கும் காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு ஆதரவாக நடிகர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். தற்போது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.