சென்னை: சென்னையில் 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு, சுமார் 450க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதிகளில் வசித்த பொதுமக்கள் குடிநீர், உணவு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தவித்தனர்.
மேலும் வட சென்னை, பள்ளிக்கரணை, வளசரவாக்கம் போன்ற பல பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாமல், மக்களை அவதிக்கு ஆளாக்கி வருகிறது. ஒரு சில பகுதிகளில் வெள்ள நீருடன், கழிவுநீரும் கலந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்க, மறுபக்கம், எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் சி.பி.சி.எல் ஆலையில் இருந்து வெளியேறியதாக கூறப்படும் எண்ணெய் கழிவுகள் மக்களை மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது.
இந்நிலையில், தற்போது தமிழக அரசு மழை நீர் வடிகால்களுக்காக செலவு செய்த 4 ஆயிரம் கோடி ரூபாய் என்னவாயிற்று என்ற கேள்வியை, தமிழகத்தின் மற்ற அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எனப் பலர் கேள்வி எழுப்புவது, சமூகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
முதலமைச்சர் சென்னது என்ன? முன்னதாக, டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், "4 ஆயிரம் கோடிக்கு மழைநீர் வடிகால் பணிகள் செய்தும் சென்னை மிதக்கிறது என எதிர்கட்சித் தலைவர் பேசியிருக்கிறார். இந்த பிரச்னையை நான் அரசியலாக்க விரும்பவில்லை. இருந்தாலும் சொல்கிறேன், 4 ஆயிரம் கோடிக்கு பணிகள் நடந்த காரணமாகத்தான் 47 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மழை பெய்தும் சென்னை இப்பொழுது தப்பித்திருக்கிறது. இதற்கு அந்த 4 ஆயிரம் கோடியை திட்டமிட்டு செலவு செய்ததே காரணம்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, சென்னையின் வெள்ளநீர் தேக்கம் குறித்து கேட்கும்போது, அமைச்சர்கள் தொடங்கி மாமன்ற உறுப்பினர்கள் வரை கூறும் ஓரே பதிலாக இருப்பது, "கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், கடலுக்குச் செல்லும் வெள்ள நீரை எதிர்த்துத் தள்ளுவதால் வெள்ள நீர் நகருக்குள் திரும்பி வருகிறது. இதனால்தான் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது" என்கிற பதிலை தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், சென்னை வெள்ளத்தில் மிதந்தது என்பது, யாராலும் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. மேலும் அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் 4 ஆயிரம் கோடி செலவிற்கான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்ற கருத்தை அறிக்கை மூலமாகவும், செய்தியாளர் சந்திப்பு மூலமாகவும் முன்வைக்கப்படுகின்றது.
அமைச்சர்கள் கூறிய பதில் என்ன? இந்நிலையில், மக்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ள 4 ஆயிரம் கோடி பிரச்னை குறித்து, தமிழக அமைச்சர்கள் பலர் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியதாவது, "அ.தி.மு.க ஆட்சியில் 2015ஆம் ஆண்டு தொடங்கி, 2021ஆம் ஆண்டு வரை உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கையில் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மழை நீர் வடிகாலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளதாக சட்டமன்ற குறிப்புகளிலேயே உள்ளது.
2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு மழை தண்ணீர் கூட தேங்காது என்றும், 6 ஆயிரம் கோடிக்கு நாங்கள் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். தற்போது வெள்ளை அறிக்கை கேட்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் செலவு செய்த 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேபோல், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு செய்தியாளர் சந்திப்பில், "மழைநீர் வடிகால் பணிகள் குறித்து யார் கேள்வி கேட்டாலும் அது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியாக இருந்தாலும், மற்ற கட்சிகளைச் சார்ந்த யாராக இருந்தாலும் அவர்களுடன் நாங்கள் எதிர் எதிரே அமர்ந்து விவாதிக்கவும், மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை நேரிலே அழைத்துச் சென்று காட்டவும் தயாராக உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா? ஆனால், வெள்ளை அறிக்கை என்பது அரசால் மட்டுமே வெளியிடப்படும் ஒன்று. மேலும், மழைநீர் வடிகால் பணிகளுக்காக அதிமுக ஆட்சியில் செலவு செய்த 6 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் திமுக ஆட்சியில் செலவு செய்த 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் சேர்த்து வெள்ளை அறிக்கை தமிழக அரசு வெளியிட்டால், சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தெரியவரும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மழைநீர் வடிகால் பணிகளுக்கான மதிப்பீடு 5 ஆயிரத்து 166 கோடி ரூபாய் என்றும், அதில் 2 ஆயிரத்து 191 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள்தான் நிறைவடைந்துள்ளது எனக் கூறியது, சென்னை மழைநீர் வடிகால் விவகாரத்தில் திருப்பமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: கரு நிறத்தில் மாறிய எண்ணூர் கடற்கரை... கண் கலங்கி நிற்கும் மீனவர்கள்.. காரணம் என்ன?