சேலம் மாவட்டம் தலைவாசலில் அமையவிருக்கும் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கு டி.டி.வி. தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ், ரா. முத்தரசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும் என்ற அறிவிப்பு சட்டமாகி, அதில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயத்தைப் பாதிக்கும் எந்த திட்டங்களுக்கும் அனுமதியில்லை என்ற தெளிவான அம்சங்கள் இடம்பெற்றால் மட்டுமே அதனை முழுமையாக வரவேற்க முடியும். மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்களையும், விவசாயிகளையும் நேற்றுமுன்தினம் வரை விரட்டி, விரட்டி வழக்கு போட்டு கைது செய்து வந்த பழனிசாமி அரசு, இப்போதாவது மக்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்து 'காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆக்குவோம்' என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதுவெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல் முறையான சட்டமாகக் கொண்டுவரப்படவேண்டும். மேலும் விவசாயிகளையும் பொதுமக்களையும் பாதிக்கிற எட்டுவழிச்சாலை திட்டம் நியூட்ரினோ ஆய்வகம் போன்றவற்றையும் தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
காவிரி பாசன மாவட்டப் பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக சார்பில் நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன்
முதலமைச்சரின் அறிவிப்பு சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (09.02.2020) சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதில் அவர், காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் வெற்றியாகும்.
நெடுவாசலில் தொடங்கிய விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு மக்கள் விரும்பாத எந்தத் திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தாது என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு இதுவரை கைவிடவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'காவிரி டெல்டா பகுதி, இனி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!