சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நேற்றிரவு (பிப்.19) திட்டமிட்டு, பெரியார் படங்கள் உடைக்கப்பட்டன, சில இடங்களில் கிழித்தெறியப்பட்டன. ABVP கும்பலின் அராஜகத்தைத் தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பல்கலைக்கழகங்கள் வெறும் பாடம் கற்றலுக்கு மட்டுமல்ல; கலந்துரையாடல், விவாதம், மாறுபட்ட கருத்துகளுக்குமான இடங்கள் ஆகும். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள ABVP அமைப்பினரின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு, பல்கலை நிர்வாகம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன். தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, ஒன்றிய பாஜக அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் JNU பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல் துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.
தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு ஆதரவாக என் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதுகாக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் இராமதாசு வெளியிட்ட அறிக்கையில், "டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரணியின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் உள்ளிட்ட மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவை கண்டிக்கத்தக்கவை.
மேலும், பல்கலைக்கழக வளாகங்களில் நீதி கேட்டு போராடும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதை தடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், "நாட்டின் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனமான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்களை கல்வித் துறையில் மட்டுமின்றி, அரசியல் பொருளாதாரத் துறையிலும் ஒளிரச் செய்து வருகிறது. இங்கு இந்திய நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் நிலைப்பெற பல்வேறு சித்தாந்தங்கள் பற்றிய கருத்தியல் விவாதங்கள் நடப்பதும், சமூக நீதி,பெண்ணுரிமை, சமத்துவம், மதச் சார்பின்மை மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட கோட்பாடுகள் பற்றி மாணவர்களிடையே கருத்தரங்கம், பயிலரங்கம் நடப்பதும் பல ஆண்டுகளாக தொடர்கின்றன.
2014-ம் ஆண்டில் மோடி தலைமையில் ஒன்றிய பாஜக அரசு அமைந்த பின்னர் ஜேஎன்யூ இந்துத்துவ மத வெறிக் கும்பலின் கொடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி மற்றும் இந்துந்துவா குண்டர்கள் ஜேஎன்யூ-வில் அத்து மீறி நுழைந்து, முற்போக்கு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யும் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், குறிப்பாக இஸ்லாமிய, தலித் மாணவர்களை இலக்காக வைத்து வன்முறையை ஏவுவதும் தொடர் நிகழ்வுகள் ஆகிவிட்டன. இதற்கு ஜேஎன்யூ நிர்வாகமும் துணை போகிறது.
நேற்று (பிப்-19) ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். கூட்டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏபிவிபி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இது கண்டனத்திற்குறியது'' என குறிப்பிட்டுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ''தமிழ்நாடு அரசும், டெல்லியிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவ வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். டெல்லி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டியது ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரின் கடமை.
டெல்லியில் சட்டம் ஒழுங்கு நிலை எப்படி சந்தி சிரிக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. இதற்கு முழுப் பொறுப்பேற்கவேண்டியவர் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா தான். தந்தை பெரியார் ஒரு கட்சித் தலைவரல்ல; உரிமை மறுக்கப்பட்ட மக்களின் மகத்தான தலைவர். எரிமலையைச் சீண்ட வேண்டாம்’’ என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர் மீது தாக்குதல்; முதலமைச்சர் கண்டனம்