தமிழ்நாட்டில் ஐந்து வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு 31ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது எனவும், ஆசிரியர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ”பொது சுகாதாரத் துறை சார்பாக முதல்கட்டமாக ஜனவரி 31ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போலியோ தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது.
ஜனவரி 31ஆம் தேதி ஞாயிறன்று முதல்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு முகாம்களில் ஐந்து வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
முகாம்கள் செயல்படவுள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இதற்கான முழு ஏற்பாடுகளைச் செய்து சுகாதாரத் துறை மற்றும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பள்ளி தலைமையாசிரியர்கள் இது குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.