சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத் தொடரில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், ''காவலர்கள் தேவை இல்லாமல் தொலைதூரப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். இதன் காரணமாக, அவர்களது குடும்பத்தினர், குழந்தைகளின் கல்வி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு மனப்பாதிப்புக்கு உள்ளாகின்றனர்'' என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''காவலர்கள், அதிமுக உறுப்பினர் குற்றம் சாட்டுவதுபோல் தேவை இல்லாமல் எங்கும் பணியிட மாற்றம் செய்யப்படுவதில்லை. உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும்போது, அதன் ஆதாரத்தைச் சொல்லி தெரிவிக்க வேண்டும். குறைகள் இருந்தால் தெரிவியுங்கள். அதனை சரி செய்ய அடுத்த நிமிடமே நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார்.
இதனையடுத்துப் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''சம்பந்தப்பட்ட காவலர் தங்களது பணியிடங்களை மாற்றம் செய்து தரக்கோரி, அதிகாரிகளிடம் 3 முறை மனுக்கள் பெறப்பட்டும் தீர்வு காணப்படவில்லை. இதனால் 200 கிலோ மீட்டருக்கு அப்பால் பணியிடம் செல்ல வேண்டி உள்ளது'' எனக் கூறினார்.
இதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், ''எதிர்க்கட்சித் தலைவரும் முதலமைச்சராக இருந்திருக்கிறார். காவலர்கள் தவறு செய்திருந்தால் மட்டுமே வேறு இடத்துக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். தவறு செய்யாத பட்சத்திலும் அவர்கள் தொலைதூர இடங்களுக்கு மாற்றப்படுவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கூறுவது தவறு. காவலர்களுக்கு பணி இட மாற்றங்கள் குறித்து தொடர்ந்து சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டு, மாற்றுப் பணி இடங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
காவலர் ஏதேனும் தவறு செய்திருந்தால் பணியிட மாற்றம் வழங்கப்பட்டிருக்கலாம். திட்டமிட்டு யாரையும் பணியிட மாற்றம் செய்வது, இந்த ஆட்சியில் நடைபெறவில்லை. பழிவாங்குவது, அரசியல் ரீதியாக செயல்படுவது எல்லாம் இந்த ஆட்சியில் நடக்காது. வேண்டும் என்று திட்டமிட்டு, எந்த அதிகாரிகளையும் மாற்றவில்லை என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: TN Assembly: ஆளுநர் மாளிகை செலவீனத்தில் குளறுபடி.. யாராக இருந்தாலும் தண்டனை உறுதி என அமைச்சர் ஆவேசம்!