சென்னை: கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 14ஆம் தேதி அன்று கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ரயிலில், முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து உள்ளார்.
அப்போது அந்தப் பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் தகாத முறையில் பெண்ணிடம் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சி அடைந்து, தனது செல்போனில் அந்த நபர் செய்யும் மோசமான செயல்களை வீடியோ எடுத்தபடி, அவரிடம் சண்டையிட்டுள்ளார்.
ஒருகட்டத்தில், இருவருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நபர் தான் போலீஸ் என்று கூறியதோடு, "உன்னால் என்ன பண்ண முடியுமோ, அதை பண்ணிக்கொள்" என்று ஒருமையில் பேசியதாக சொல்லப்படுகிறது. பின்னர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதே, அந்த நபர் பாதி வழியில் இறங்கி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
அதனை அடுத்து, மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி, ரயில்வே காவல் அதிகாரியிடம் தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறி புகார் அளித்து, தான் பதிவு செய்திருந்த வீடியோக்களையும் சமர்ப்பித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில், ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பாதிக்கப்பட்ட பெண் சமர்ப்பித்த வீடியோ மற்றும் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரித்துள்ளனர். அதில், ரயிலில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செயலில் ஈடுபட்ட நபர், தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணிபுரிந்து வரும் கருணாகரன் என்பதை ரயில்வே போலீசார் உறுதி செய்தனர்.
அதன் பின்னர் வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பணியைச் செய்யும் காவலரே இப்படி மோசமான செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஈரோட்டில் முன்பகையால் பறிபோன உயிர்.. தந்தை, மகன் உட்பட 8 பேர் கொண்ட கும்பல் கைது!