சென்னை: சென்னையில் போதைத் தடுப்புக்கான நடவடிக்கை மூலம் போதைப்பொருள்கள் கடத்துவோர், விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து காவல் துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்கின்றனர். மேலும் மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகளை வாங்கி, இளைஞர்கள் போதைக்குப் பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்தன.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மருந்தக உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (நவம்பர் 23) மாலை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டமானது காவல் கூடுதல் ஆணையாளர்கள் செந்தில்குமார், கண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
சிசிடிவி கேமரா பொருத்தம்
அப்போது காவல் துறை அலுவலர்கள் பேசுகையில், "போதை தரக்கூடிய மருந்து, மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது. அத்தகைய மாத்திரைகளின் பெயர்களை எழுதி, உரிய மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் விற்பனை செய்ய இயலாது என எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும். மருந்துகள் விற்பனை செய்யும் விவரங்களை முறையான பதிவேட்டில் பதிந்து பராமரிக்க வேண்டும்.
அனைத்து மருந்துக் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். தூக்கத்தை வரவழைக்கக் கூடிய மருந்துகளை சிறுவர்களிடம் நேரடியாக வழங்கக் கூடாது. போதை மருந்துகள் குறித்து தகவல் தெரிவிக்க மருந்துக் கடையின் வெளிப்புறத்தில், அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்களை எழுதி ஒட்டியிருக்க வேண்டும். சிறுவர்களுக்கு போதை மருந்துகளை விற்கும் மருந்தக விவரங்களைக் காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு தெரிவிக்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். போதை தரும் மருந்து, மாத்திரைகளை யாருக்கும் மொத்தமாக வழங்கக் கூடாது. போதை மாத்திரைகள் கேட்டு தொந்தரவு செய்து மிரட்டும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
இதையும் படிங்க: Tomato Price: பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி - அமைச்சர் ஐ.பெரியசாமி