கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வரும் நிலையில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு எதற்காகவும் வெளியே வரகூடாது எனவும் எச்சரித்து உள்ளனர். இந்த உத்தரவை மீறி வெளியே சுற்றி திரியும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வையும், நூதன முறையில் தண்டனையும் வழங்கி வருகின்றனர்.
அதேபோல் புளியந்தோப்பு நேரு நகர் பகுதியில் சீட்டு விளையாடி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 10 பேரை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவர்களை தெருவில் நடக்கவைத்து ஊரடங்கை மீறி சூதாட மாட்டோம், மீறினால் கொரோனா எங்கள் உயிரை எடுக்கும் இந்த குற்றத்தை செய்ய மாட்டோம் என்று கூறச்சொல்லி நூதன முறையில் காவல்துறையினர் தண்டனை வழங்கியுள்ளனர். மேலும் இனி சூதாட்ட விளையாட்டில் ஈடுபடமாட்டோம் என்றும் உறுதிமொழி பெற்றுக்கொண்டு அவர்களை எச்சரித்து அனுப்பினர்.