சென்னை: நங்கநல்லூர் மூவரசம்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்வின் போது ஐந்து இளைஞர்கள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கோயில் நிர்வாகம் காவல்துறையிடம் முறையாக அனுமதி பெறவில்லை எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்த நபர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முறையாக அனுமதி பெறாத கோயில் நிர்வாகத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கலாசேத்திரா கல்லூரியை அவதூறாகப் பேசுவது எனது தாயைப் பேசுவது போல் உணர்கின்றேன்' - நடிகை அபிராமி
இந்த நிலையில் மூவரசம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கங்கை அம்மன் கோவில்குளம் ஆழமானப் பகுதி எனவும், பாதுகாப்புக் கருதி யாரும் குளத்தில் இறங்கக் கூடாது என மூவரசம்பட்டு ஊராட்சி நிர்வாகம் பதாகை வைத்துள்ளனர். மேலும் இரும்பு பேரிகார்டுகள் மூலம் அந்தப் பகுதி தடுப்புகள் அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கோவில் நிர்வாகிகள் தவிர்க்க முடியாத காரணங்களால் கோயிலில் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்தால் நிராகரிப்பதாக பொருள்: ஆளுநர் ஆர்.என்.ரவி ஓபன் டாக்!