கடந்த ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் உதவி ஆய்வாளராக குருமூர்த்தி என்பவர் பணிபுரிந்து வந்தார். அப்போது கொள்ளை வழக்கு ஒன்றில் மகேஷ் என்ற கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டு இருந்தனர். உதவி ஆய்வாளராக இருந்த குருமூர்த்தி, கொள்ளையன் மகேஷை போலீஸ் பிடிக்க வருவதாக தகவல் கொடுத்துள்ளார். இதனால் கொள்ளையன் போலீசார் பிடியில் சிக்காமல் தலைமறைவானார்.
கொள்ளையன் இருக்கும் இடத்தை தெளிவாக அறிந்து திட்டமிட்டு கைது செய்ய முற்பட்டபோது எவ்வாறு கொள்ளையன் தப்பித்து சென்றார் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதனையடுத்து கொள்ளையன் மகேஷை கைது செய்த பிறகு செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையனை பிடிக்க செல்லும் நாளன்று உதவி ஆய்வாளர் குருமூர்த்தி தொடர்பு கொண்டது அம்பலமானது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், உதவி ஆய்வாளர் குருமூர்த்தி தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். தற்போது கொள்ளையன் மகேஷ் தப்பிக்க உதவியது குருமூர்த்தி என்பது உறுதி செய்யப்பட்டதால், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், உதவி ஆய்வாளர் குருமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.