உளுந்தூர்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி, ராசாமணி ஆகியோருக்கு இடையே சொத்து தகறாறு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து கடந்த 2017ஆம் ஆண்டு சுந்தரி, திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது வழக்குப்பதிவு செய்ய காவல் உதவி ஆய்வாளர் எழிலரசி 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
பின்னர், சுந்தரி 2 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தும், உதவி ஆய்வாளர் எழிலரசி வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து அப்போதைய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சுந்தரி புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் சுந்தரி, ராசாமணி ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுந்தரியை காவல் உதவி ஆய்வாளர் எழிலரசி கைது செய்து சிறையில் அடைத்தார். பிணையில் வெளியே வந்த சுந்தரி உதவி ஆய்வாளர் எழிலரசி மீது மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த அதன் ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் எழிலரசியின் நடவடிக்கையில் மனித உரிமை மீறல் இருப்பது நிரூபணமானது. எனவே, பாதிக்கப்பட்ட சுந்தரிக்கு நான்கு வாரத்தில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த தொகையை காவல் உதவி ஆய்வாளர் எழிலரசியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யுமாறும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: ரூ.1.50 லட்சம் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை