கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்திக் கொண்ட சிலர் சட்டவிரோதமாக கள்ளத்தனமாக மதுபானங்கள், கள்ளச்சாராயம், சுண்டக்கஞ்சி ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்காக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர், ஆபரேஷன் விண்டு என்று பெயரிடப்பட்டு தமிழ்நாடு முழுவதுமுள்ள மலை பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15 நாள்களாக மேற்கொண்ட சோதனையில் தமிழ்நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயம், மதுபானம், சாராய ஊறல்கள் விற்றதாக 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டள்ளன.
விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி மலையில் 3 ஆயிரத்து 300 லிட்டர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாயிரத்து 200 லிட்டர், வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 800 லிட்டர், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆயிரத்து 100 லிட்டர், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்து 200 லிட்டர், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2ஆயிரத்து 200 லிட்டர் என மொத்தம் 14ஆயிரத்து 232 லிட்டர் சாராய ஊறல், 2ஆயிரத்து 210 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும், 2ஆயிரத்து 757 மதுபான பாட்டில்களும், 14ஆயிரத்து 505 வெளிமாநில மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்பனை செய்வது குறித்து பொதுமக்களுக்குத் தெரிந்தால் 10581, 94984 10581 ஆகிய எண்களுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு காவல்துறை கேட்டுகொண்டுள்ளது.