சென்னை: தாம்பரம் அடுத்த அகரம்தென் ஊராட்சி பதுவஞ்சேரியைச்சேர்ந்தவர், முருகன்(37). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு, சேலையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சைப்பெற்று வரும் அவரது நண்பர்களை பார்க்கச்சென்றார்.
அப்போது பார்வையாளர்கள் அமரும் இருக்கையில் முருகன் அமர்ந்துகொண்டு இருந்தார். அப்போது மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் பின்பக்கமாக வந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக்கொண்டு சென்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து சேலையூர் போலீசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து, இரண்டு நாட்களாக குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் வைத்து முருகனை வெட்டிவிட்டு, தப்பி ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதில் மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் முருகன் அமர்ந்திருக்கும் இருக்கைக்குப் பின்பக்கமாகச் சென்று கத்தியால் தலையில் வெட்டிவிட்டு, அவர் அங்கிருந்து தப்பி ஓடியதும், ரத்த வெள்ளத்தில் முருகன் மயங்கிக்கீழே விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
மேலும் சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் பட்டாக்கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் செல்லும் குற்றச்செயல்கள், தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காவல்துறையினர் இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனப்பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்திருட்டு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை