செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஹைதர் அலி (54). இவர் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார். இவர் கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். ஹைதர் அலி நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல கடையில் விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது 12 நபர்கள் பிரியாணி சாப்பிட வந்துள்ளனர். அவர்களில் இருவர், ஒரு குவாட்டர் பிரியாணியை இரண்டாகப் பிரித்து தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு கடையில் இருந்த ஊழியர்கள் குவாட்டர் பிரியாணியை எல்லாம் இரண்டாகப் பிரித்துத் தர முடியாது எனக் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து, போதையில் இருந்த 12 நபர்களும் சேர்ந்து கடை உரிமையாளர் ஹைதர் அலியை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். அதில் மயக்கம் போட்டு கீழே விழுந்த ஹைதர் அலியை மீட்ட கடை ஊழியர்கள் அவரை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் கூடுவாஞ்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தனியாக இருக்கும் மூதாட்டிகளே குறி! ஆதம்பாக்கம் கொலை வழக்கில் கொலையாளி செய்த பயங்கரம்